மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் தேர்வு
Tirupur : திருப்பூர் மாநகராட்சி சார்பில், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம், புதுராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று நடந்தது. உயிர்காக்கும் உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தில், அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளிகள் தேர்வு, 14வது வார்டு புதுராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடந்தது; கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.

tirupurnews-medical
நகர் நல அலுவலர் ஜவஹர் கூறியதாவது: முகாமில், 214 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்; 17 பயனாளிகள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர, காப்பீடு திட்டத்தில் உள்ளடங்காத, ஒன்பது குழந்தைகளுக்கு இருதய ஓட்டை தொடர்பாக “எகோ’ சிகிச்சை இலவசமாக அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரேவதி மெடிக்கல் சென்டர், குமரன் மருத்துவமனை நிர்வாகங்கள் இதற்கான இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளன. மேலும், 10 பயனாளிகள் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற முகாம்கள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படும். வரும் 11ம் தேதி 26வது வார்டு ராயபுரம் மாநகராட்சி பள்ளியிலும்; வரும் 13ம் தேதி ஆறாவது வார்டு நெசவாளர் காலனியிலும் நடத்தப்படும், என்றார்.










