அவிநாசி கோவிலை வியந்த அமெரிக்க வல்லுனர் குழு
Tirupur : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த அமெரிக்க தொழிற்துறை வல்லுனர் குழுவினர், சிற்பங்களை பார்த்து வியப்படைந்தனர். அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த பல்தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆடிஷ், கிறிஸ்டி, ஜக்பீர்சிங் அனுவாலியா உள்ளிட்ட ஐவர் குழுவினர்,அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலை பார்வை யிட்டனர்.
சர்வதேச ரோட்டரி கிளப் சார்பில், அவிநாசி கோவிலுக்கு வந்த அமெரிக்க குழுவுக்கு, அவிநாசி ரோட்டரி கிளப் தலைவர் அர்விந்தன், செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமெரிக்க தொழில் நுட்ப வல்லுனர் குழுவினர், அவிநாசி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் முழுவதுமுள்ள சிற்பங்கள், கட்டட அமைப்பு, மண்டபங்கள், கோபுரங்களை பார்த்து வியப்படைந்தனர்; கட்டுமானப் பணிகளை பெரிதும் பாராட்டினர்.
அவிநாசி கோவிலை பார்வையிட்ட பின், ஜக்பீர்சிங் கூறுகையில், “”கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அவிநாசி கோவில் விளங்குகிறது. ஒவ்வொரு சிற்பமும் மிக அழகாக இந்து மதத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. மிக தொன்மையான பாரம்பரியத்தை கொண்ட தமிழக கோவில்களில் அவிநாசி கோவிலுக்கும் தனிச்சிறப்பு உண்டு என்பதை அறிந்து கொண்ட பின்னரே, இங்கு வர முடிவு செய்தோம்.
இந்தியாவின் பழமையான கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை இக் கோவிலின் மூலம் நன்றாக உணர முடிந்தது,” என்றார்.கோவில் தல வரலாறு குறித்து அவிநாசி கிளப் நிர் வாகிகள், அமெரிக்க வல்லுனர்களுக்கு விளக்கினர்.




