முதல்வர் கவனம் வியப்பளிக்கிறது : தே.மு.தி.க., கிண்டல்
Avinashi : “தமிழகத்தில் எண்ணற்ற பிரச்னைகள் உள்ளபோது, புதிய சட்டசபை கட்டுவதற்கு தமிழக முதல்வர் அதிக கவனம் எடுத்துக் கொள்வது வியப்பை அளிக்கிறது,” என தே.மு. தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். தே.மு.தி.க., பொதுக் கூட்டம், பெருமாநல்லூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இளைஞரணி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாம்பார் வைப்பதற்கு ரூ.40 செலவாகிறது. “ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறோம்,’ என்று பெருமையடிக்கின்றனர். அதை கடத்திச் சென்று கிலோ ரூ.12க்கு விற்கின்றனர். அரிசி கடத்தலில் தமிழகம் படுவேகமாக முன்னேறி வருவதை காண முடிகிறது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது, அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருந்தோம். வெளிமார்க்கெட்டில் அரிசியின் இருப்பை குறைத்தால் விலை தன்னால் குறையும்.
இரண்டு ஆண்டுக்கு முன், ஒரு கிலோ ரூ.12 என்ற கணக்கில் 50 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்று ரூ.42 என்ற விலையில் 40 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சர்க்கரை ஆலைகள் கொளுத்த லாபம் அடைந்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, நடுத் தர மக்களை மிகவும் பாதித் துள்ளது. பால் விலையும் ஏறப்போகிறதாம். தனியார் பள்ளிகளில் தாறுமாறாக கல்வி கட்டணம் உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் பல பிரச்னைகள் உள்ளபோது, புதிய சட்டசபை கட்டுவதற்கு தமிழக முதல்வர் அதிக கவனம் எடுத்துக் கொள்வது வியப்பை அளிக்கிறது. வரலாற்றில் தன்னுடைய பெயரும் இடம் பெற வேண்டுமென்ற நோக்கில் புதிய சட்டசபை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகியவற்றில் முதல்வர் கவனம் செலுத்துகிறார். இவ்வாறு, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
முன்னதாக, மாநில தேர்தல் பிரிவு செயலாளர் அக்பர், மாவட்ட செயலா ளர் தினேஷ்குமார் உட்பட பலர் பேசினர்.










