கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம்: போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
Palladam: பல்லடம், கள்ளிமேடு அரிஜன காலனி பகுதிக்கு குடிநீர், மின்விளக்கு, பாதை வசதி கேட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று நடைபயணம் மேற்கொள்ள முயன்ற பொதுமக்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிமேடு பகுதியில் 153 அரிஜன குடும்பங்கள் வசிக்க, தலா இரண்டு சென்ட் வீதம் 2002ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. கள்ளிமேட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால், குடியேறிய பலரும் தங்களின் குடிசைகளை அப் படியே அங்கேயே விட்டு விட்டு, அருகில் உள்ள வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர்.
தற்போது, 40 குடும்பங்கள் குடிசைகள் அமைத்து கள்ளிமேட்டில் குடியிருந்து வருகின்றன. அரிஜன காலனி மக்களுக்கு குடிநீர், மின்விளக்கு, பாதை வசதி கேட்டு, கள்ளிமேட்டில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் பல்லடம் தாலுகா மா.கம்யூ., செயலாளர் சத்தியமூர்த்தி, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், பரமசிவம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு நடைபயணமாக நேற்று செல்ல முயன்றனர். டி.எஸ்.பி., ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் பெரியய்யா தலைமையிலான போலீசார், ‘நடைபயணத்துக்கு அனுமதி கிடையாது. மீறி நடைபயணம் மேற்கொள்ள முயற்சித்தால் கைது செய்வோம்’ என எச்சரித்தனர்.
போலீசாரின் எச்சரிக்கைக்கு மா.கம்யூ., கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், அவ்வழியாக திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி, கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றனர்.
நன்றி தினமலர்










