கலெக்டர் எச்சரிக்கை : குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் நடவடிக்கை
Tirupur : “14 வயதுக்கு குறைவான குழந்தைகளை, பணியில் அமர்த்தக்கூடாது; மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என கலெக்டர் எச்சரித்துள்ளார். தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட துறை வாரிய அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங் கேற்ற கூட்டம், திருப்பூரில் நடந்தது.
கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
14 வயதுக்கு குறைவான குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. ஈடுபடுத்துவோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் கல்வி பெறுவதற்கு அரசு எல்லாவித சலுகைகளையும் வழங்கி வருகிறது; “வறுமையின் காரணமாக படிக்க வைக்க முடியவில்லை’ என, பெற்றோர் கூறும் காரணங்களை ஏற்க முடியாது.
துவக்க கல்விக்காக அரசு செய்து வரும் சலுகைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளே, குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர். இவர்கள் வேலை செய்யும் இடங்களில் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். இதுபோன்ற ழந்தைகளை மீட்டு கல்வி அளிப்பதன் மூலம் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.
குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர், அரசின் நலத் திட்டங்களில் பயன்பெறும் வகையில், உரியவர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் பெற்று உதவிகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார். குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய, குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு நிதி 20 ஆயிரம் ரூபாயை தாமதமின்றி வசூலிக்க, தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
கணியூரில் உள்ள குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காரத்தொழுவில் இருந்து, கணியூர் பள்ளிக்குச் செல்ல இலவச பஸ் பாஸ், சீருடை, பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.தேசிய குழந்தைத்தொழிலாளர் திட்ட இயக்குனர் விஜயகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் துரைக்கண்ணன், தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.










