பெண்ணின் கழுத்தை அறுத்து நகை பறிப்பு
Tirupur : திருப்பூரில், போட்டோ ஸ்டியோவுக்குள் நேற்று பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், அங்கு தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து, நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோடு குமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார்; இவரது மனைவி சித்ரா (25). தாராபுரம் ரோட்டில் முரளி என்பவருக்குச் சொந்தமான போட்டோ ஸ்டியோவில் வேலை செய்கிறார். நேற்று, அவர் போட்டோ ஸ்டியோவில் தனியாக இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் ஸ்டியோவுக்குள் நுழைந்து புகைப்படம் எடுப்பதுபோல நடித்து, சித்ரா கழுத்தில் இருந்த செயினை பறித்தனர். சித்ரா, “செயினை பலமாக பிடித்துக்கொண்டு; அது தங்கச்செயின் அல்ல; கவரிங் நகை,’ என, கூறியுள்ளார்.அதை நம்பாத திருடர்கள், கத்தியால் சித்ரா கழுத்தை அறுத்துவிட்டு, செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
கவரிங் செயினில் மாங்கல்யத்தை இணைத்து அணிந்திருந்தார். மாங்கல்யம், அரைப்பவுன் நகையால் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தெற்கு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். கழுத்தில் பலத்த காயமடைந்த சித்ரா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.











