மாநகராட்சி பட்ஜெட் : வரவேற்பும்; எதிர்ப்பும்!

Tirupur : திருப்பூர் மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. “வளர்ச்சி பணிக்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட வில்லை; மக்களுக் கான அடிப்படை வசதிகளை செய்வதற்கான உத்தரவாதம் இல்லை,’ எனக்கூறி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் இந்த பட்ஜெட்டை வரவேற்று, பாராட்டினர்.

இ.கம்யூ., – மா.கம்யூ., கவுன்சிலர்கள் பட்ஜெட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினர். கவுன்சில் விவாதம் வருமாறு:நடராஜ் (இ.கம்யூ.,): கடந்தாண்டு 199 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்தாண்டு தெரிவிக்கப்பட்ட பணிகள் கூட, இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. கடந்தாண்டு தெரிவித்த சாலைப்பணிகளுக்கான 125 கோடி ரூபாய் திட்டம், இந்த பட்ஜெட் அறிக்கையிலும் உள்ளது.பட்ஜெட் புத்தகம் அலங்காரமாக மஞ்சள் வர்ணத்தில் உள்ளது.

மஞ்சள் நிறத்தை இரண்டு விதமாக கூறலாம். மஞ்சள் நிறம் மங்கலகரமானது. அதே சமயம், ஐ.பி., கொடுக்க மஞ்சள் நோட்டீஸ் எனக் கூறுவர். மாநகராட்சியில் ஒன்றும் நடக்கவில்லை எனவும் எடுத்துக்கொள்ளலாம். குடிநீர் வினியோகம் பாதிக்காமல் இருக்க மின்சாரம் தடைபடும் போது பயன்படுத்த ஜெனரேட்டர் வாங்க முடிவு செய்து ஒராண்டாகியும் இன்னும் வாங்கப்பட வில்லை.

ஆழ்குழாய் கிணறுகளில் மின் மோட் டார் பொருத்தும் பணியும் முழுமையாக நடக்கவில்லை. நான்காம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவக்கப்படவில்லை. பூங்காக்களை மாநகராட்சி இதுவரை பராமரிக்கவில்லை; அதற்கான நிதி ஒதுக்கீடும் இல்லை. புதிதாக வாங்கப்பட்ட கொசு மருந்து மெஷின்கள் உபயோகத்தில் இல்லை. அதை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் ஏற்படுகிறது. அந்த மெஷின்களை காணவில்லை. அதற்கான சிலிண்டர்கள், மருந் துகள் இல்லை. குடிசை மேம் பாட்டு திட்டத்தின் உண்மை நிலை என்ன? அடிப்படை வசதிகளை செய்ய வார்டுக்கு 10 லட்ச ரூபாய் என ஒதுக்கீடு செய்யவேண்டும்.

ஈஸ்வரமூர்த்தி (மா.கம்யூ.,): தரம் உயர்த்தப்பட்டும், முழுமையான மாநகராட்சியாக உருவாகவில்லை. கோவில் வழியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முயற்சி நடக்கிறது. அங்கு, மாநகராட்சிக்கு சொந்தமாக 13 ஏக்கர் இடம் உள்ளது. ஆனால், 4.5 ஏக்கர் இடம் மட்டும் உள்ளதாக, அரசுக்கு மாநகராட்சி அறிக்கை கொடுத்துள்ளது. அங்கு, பஸ் ஸ்டாண்ட் வரும் நடவடிக் கையை மாநகராட்சி தடுப்பதுபோல் உள்ளது. சுகாதார பணிகளில் மாநகராட்சி மோசமாக உள்ளது. போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை. குப்பை லாரிகள், காலை 8.00 மணி அளவில் தான் குப்பை எடுக்க புறப்படுகின்றன. அவிநாசி ரோட்டில், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.

அந்த ரோட்டில், தனியார் டிராவல்ஸ் வாகனங்களால் பொதுமக்கள் இன்னல்படுகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு டிராவல்ஸ் வாகனங்களை இடம் மாற்றினால், புதிய பஸ் ஸ்டாண்டில் காலியாக இருக்கும் கடைகளை டிராவல்ஸ் நிறுவனங்கள் ஆபீஸ் அமைக்கப் பயன்படுத்துவர். அதனால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்; துப்புரவு தொழிலாளர்களுக்கு புதிதாக வீடு கட்டித்தர வேண்டும். ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.,): மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, மக்களிடையே மிகுந்த எதிர் பார்ப்பு இருக்கும். திருப்பூர் மாநகராட்சி அறிக்கையிலும், மக்கள் நல திட்டங்களுக்கும், வளர்ச்சி பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மக்களின் எதிர்பார்ப்பும், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வளர்ச்சி பணிகளுக்கென ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு, வளர்ச்சி பணிகளை செய்ய நேரடியாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம் மாநகராட்சியின் நிதிநிலை சீராக இல்லை என்று தெரிகிறது.பெரிதாக திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத, திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது. இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை.

வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். (அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்). செல்வராஜ் (மேயர்): “கையேந்தி பவன்’ நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்; புதுமையாக அறிவிக்க ஒன்றுமில்லை. சிவபாலன் (ம.தி.மு.க.,): மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முன்னுரிமை கொடுக் கப்பட வில்லை. அலங்கார பட் ஜெட்டாக உள்ளது. சுகாதார பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மாநகராட்சி வருவாயை பெருக்க, தொழில் வரி வசூலிப்பதை சீரமைக்க வேண்டும். பலர், வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். குடிநீர் கட்டணம் வசூலிப்பதிலும் சீரான முறையை கடைபிடிக்க வேண்டும். பழனிச்சாமி (தி.மு.க.,): திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வது சாதாரண வேலை அல்ல. பல்வேறு திட்டங்களை மாநகராட்சி செய்து வருகிறது. குடிசை பகுதிகளை மேம் படுத்த மாநகராட்சி நிதியில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டில் சர்வதேச தரத்தில் கழிவறை வளாகம் 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. பட் ஜெட்டை, தி.மு.க., வரவேற்கிறது.

செந்தில்குமார் (துணை மேயர்): மேம்போக்காக பார்த்தால், இந்த பட் ஜெட்டில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றும். ஆனால், பலாப்பழம் போல் வெளியே முள்ளாகவும்; உள்ளே ருசியாகவும் இந்த பட்ஜெட் உள்ளது. பல்வேறு திட்டப்பணிகள் நிறைவடைந்த பின், தித்திப்பாக இருக்கும். அங்கீகரிக்கப்படாமல் இருந்த குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வாழ முடியாத நிலையில் அவதிப்பட்டனர். வரன்முறை செய்யப்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க, 40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அப்பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

அதேபோல், 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 52 வார்டுகளில் உள்ள அனைத்து ரோடுகளும் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளன. இப்பணிகள் முடிவடையும்போது, கஞ்சிப்பலா போன்றில்லாமல் ருசிக்கும் “பலாப் பழமாக’ இருக்கும். இந்த பட் ஜெட்டை காங்., வரவேற்கிறது. முஸ்லிம் லீக் கவுன்சிலர் கலிலூர் ரஹ்மான், காங்., – தி.மு.க., கவுன்சிலர்கள் வரவேற்று பேசினர்.
வேலுச்சாமி (இ.கம்யூ.,): குமார் நகர் தீயணைப்பு நிலைய பகுதியிலும், பிஷப் மேல்நிலைப்பள்ளி பகுதியிலும் இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை; வழிப்பறி சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுவதை தவிர்க்க, எரியாத விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

கேசவன் (அ.தி.மு.க.,): ராயபுரத்தில் மத்திய வீதியின் நடுவே, விளையாட்டு மைதானத் திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் பல்வேறு திடல்கள் அமைத்து உடற்பயிற்சி சாதனங்களும் நிறுவப்பட்டன. விளையாட்டு திடலாகவும், பொதுக்கூட்டம் மற்றும் கோவில் விழாக்கள் நடைபெறும் இட மாகவும் உள்ள இம்மைதான துக்கு, அண்ணாதுரை திடல் என்று பெயர் வைக்க வேண்டும். பாதாள சாக்கடை அமைக்க, தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் கிடக்கின்றன. அவற்றை செப்பனிட வேண்டும்.

மேயர்: நகராட்சியாக இருந்த போது, சில நடவடிக்கைகளை தன்னிச்சையாக எடுக்க முடிந்தது; தற்போது மாநகராட்சி மற்றும் மாவட்ட அந்தஸ்து பெற்றுள்ள தால், மாவட்ட நிர்வாக முடிவு களை பொருத்து, மாநகராட்சியில் முடிவுகள் எடுக்க வேண்டியுள் ளது. பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும்.
மரிய சிசிலியா (மா.கம்யூ.,): சாக்கடை கழிவுகள் சரிவர அகற் றப்படுவதில்லை. புதிதாக கட்டும் பாலங்களுக்கு, முறைப்படி தண் ணீர் ஊற்றுவதில்லை; அதனால், பாலங்கள் விரைவில் உடைந்து விடுகின்றன. குழாய்களில் ஏற்படும் கசிவை தடுக்காததால், குடிநீர் வீணாகிறது. ஆரம்பப் பள்ளிகள் மோசமான நிலையில் இயங்குகின்றன. கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவரை புதுப்பிக்க, மாநகராட்சி நிதி ஒதுக்க வேண்டும்.

மேயர்: சில பள்ளிகளின் கட்டுமான பணிகளை எடுத்துச் செய்வதற்கு, ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. பெற்றோர் – ஆசிரியர் கழகம் போன்றவற் றுடன் இணைந்து கவுன்சிலர்கள் பொறுப்பெடுத்து செய்வதாக இருந்தால், மாநகராட்சி தரப்பில் நிதி ஒதுக்கி ஒத்துழைப்பு தரப்படும்.

ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): மீட்டர் பொருத்தாத குடிநீர் இணைப்புகளுக்கு, அதிகாரிகள் அவர்களாகவே தொகை நிர்ணயம் செய்கின்றனர்; எதை அடிப் படையாக வைத்து அளவீடு செய்யப்படுகிறது? கமிஷனர் ஜெயலட்சுமி: மீட்டர் பொருத்தாத குடிநீர் இணைப்புகள் பலவற்றை, கம்பெனி மற்றும் கடைகளுக்கும் சேர்த்து பயன் படுத்துகின்றனர். அவற்றை கண்காணித்து மீட்டர் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்டர் பழுதாகி இருந்தால், ஏற்கனவே, நிர்ணயிக்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாவித்திரி (மா.கம்யூ.,): குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, மாநகராட்சியில் இருந்து செலுத்தப் படும் கட்டணம் பட்ஜெட்டில் மொத்தமாக குறிப்பிடப் பட்டுள்ளது; தனித்தனியாக குறிப்பிட்டால், தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். கமிஷனர்: வரவு- செலவு அறிக்கையில், அதற்கான அமைப்புப்படி குடிநீர் வாரியத்துக்கு செலுத்தப்படும் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. தனித்தனியாக பட்டியலிடப்படுவதில்லை. பரமேஸ்வரி (ம.தி.மு.க.,): பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமின்றி காணப்படுகிறது; அதை ஆய்வு செய்து பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும். மேயர்: கழிப்பிடத்தை ஆய்வு செய்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பட்ஜெட் துளிகள் : மாநகராட்சி பகுதியில் 83 ஆயிரத்து 126 சொத்து வரி விதிப்புகள் உள்ளன. 2009-10ல் 13 கோடி ரூபாயாக இருந்த சொத்து வரி வருவாய், 2010-11ல் 13.75 கோடி ரூபாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் வரி 1.06 கோடியில் இருந்து 1.31 கோடியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர பதிவுத்துறையால், மாநகராட்சி எல்லைக்குள் வசூலிக்கப்படும் முத்திரை தீர்வை மீதான மிகுவரியில் 95 சதவீதம் மாநகராட்சிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதன் வகையில், 2010-11ம் ஆண்டிற்கு 3.20 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வணிக வரித்துறையால் மாநகராட்சி எல்லைக்குள் வசூலிக் கப்படும் கேளிக்கை வரியில் 90 சதவீதம் மாநகராட்சிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதன்படி, மாநகராட்சிக்கு 50 லட்ச ரூபாய் கிடைக்கும்.

சந்தை, நவீன கட்டண கழிப்பிடம், வணிக வளாகம், பஸ் ஸ்டாண்ட் கட்டணம், தொழில் உரிமக்கட்டணம் உட்பட குத்தகை இனங்கள் மூலம் 4.38 கோடி ரூபாய் கிடைக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. புதிய குடிநீர் இணைப்புகளுக்காக வசூலிக்கப்படும் வைப்புத் தொகை மூலம் 1.25 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டில் குடிநீர் கட்டணம் மூலம் 7.25 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply