வனத்தில் ‘பார்’ உடுமலை, அமராவதியில் அதிகரிப்பு அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
Udumalai : உடுமலை, அமராவதி வனப்பகுதிகளில் ஆங்காங்கே மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவியலாக காணப்படுகிறது. அத்துமீறி வனத்தில் நுழையும் பொழுது போக்கு கும்பலை வனத்துறையினர் கட்டுப்படுத்தினால் மட்டுமே வனத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, புள்ளி மான், கடமான் என பல்வேறு வகையான வனவிலங்குகள் அதிகளவு வசிக்கிறது. இந்த வனப்பகுதியில் உடுமலை- மூணாறு வழித்தடம் அமைந்துள்ளது. இயற்கை எழில்அழகான இப்பகுதியில், மலை மீது பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலும் உள்ளது. கோவிலுக்கு சனிக்கிழமைகளில் வரும் பக்தர்கள், மூணாறு செல்லும் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கும் இவ்வழித்தடமே உள்ளது.இந்நிலையில், ஏழு மலையான் கோவிலுக்கு செல்லும் பாதையினை, பிளாஸ்டிக் பொருட்களும், மதுபான பாட்டில்களும் ஆக்கிரமித்துள்ளன.கணக்கெடுப்பு பணிக்கு சென்ற வன ஆர்வலர்கள் குவிந்து கிடக்கும் மதுபான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.வன ஆர்வலர்கள் கூறியதாவது:
மூணாறு மலைப்பாதையில் வாகனங்களில் வருபவர்கள் பகல், இரவு என்று பாராமல் தங்களது வாகனங்களிலிருந்து “ஹாரன் ‘ எழுப்புவதுடன், அதிக சப்தத்துடன் பாடல்களை கேட்ட படியும் செல்கின்றனர். அதிவேகமாகவும் வாகனஓட்டிகள் செல்வது வாடிக்கையாக உள்ளது. ஒன்பதாறு செக் -போஸ்ட்டிலிருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பாதையில், பிளாஸ்டிக் பொருட்களும், மதுபான பாட்டில்களும் குவிந்து கிடக்கிறது.ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தும் சுற்றுலாப்பயணிகள் மது அருந்த இடத்தை தேர்வு செய்து “பார்’ ஆக மாற்றி சக நண்பர்களுடன் குடித்து கும்மாளமிடுகின்றனர். பின், மதுபான பாட்டீல்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும் அப்படியே வீசி செல்கின்றனர்.உடைந்து கிடக்கும் பாட்டீல்கள், சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன் வனத்தின் அழகுசீர்குலைகிறது. மேலும், உடைந்து கிடக்கும் மதுபான பாட்டில்களால், வனவிலங்குகளுக்கு காயங்கள் ஏற்படுவதுடன் சிதறி கிடக்கும் “பிளாஸ்டிக்’ பை உள்ளிட்ட பொருட்களை உட்கொள்வதால், வனவி ங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வனத்தின் அழகை பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். இவ்வாறு, வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.










