ரசனையை முடமாக்கும் திரைப்பட காட்சி: மன உளைச்சலுக்கு ஆளாகும் பயணிகள்
Tirupur : தனியார், அரசு பஸ்களில் பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் கவர்ச்சி பாடல்கள், திரைப்படங்கள் காதை செவிடாக்கும் இரைச்சலுடன் திரையிடப்படுகின்றன. கல்லூரி மாணவியர், பயணிகள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
திருப்பூரில் இருந்து மதுரை, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு, தாராபுரம் பகுதிகளுக்கு தனியார், அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளை கவரவும், பொழுதுபோக்காகவும் இந்த பஸ்களில் புதிய திரைப்படங்கள், பாடல் காட்சிகள் திரையிடப்படுகின்றன. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஓட்டுனரின் விருப்பம் போல் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட பாடல்கள், காமெடி காட்சிகள், திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.”டிவி’க்களில் நள்ளிரவில் ஒலிபரப்பப்படும் “மிட் நைட்’ மசாலாக்களை மிஞ்சுவதாக, இப்பாடல்கள் இருக்கின்றன. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு பயணிக்கும் பெண்கள், கூச்சப்படுகின்றனர்.
பெற்றோருடன் பயணிக்கும் இளம்பெண்களும் வேறு வழியின்றி சகித்துக் கொள்கின்றனர்.பல தனியார் பஸ்களில் போதுமான கண்காணிப்பு இல்லாததே காரணம். பஸ் உரிமையாளர்கள், பஸ்சில் என்ன படம் ஓடுகிறது என்பதை கண்டுகொள்வதில்லை. கண்டக்டர், டிரைவர்கள் விருப்பம் எதுவோ, அதுவே பஸ்சிலும் திரையிடப்படுகின்றன. பஸ்சையும் ராக்கெட்வேகத்தில் ரட்டுகின்றனர்.
“எப்போது ஊரு போய் சேருவோம்’ என ஏங்கும் மனநிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். தனியார் பஸ்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, சமீபகாலமாக அரசு பஸ்களும் இதே ஆபாச பாடல் பாணியை கடைபிடிக்கத் துவங்கிஉள்ளன.பஸ்சில் அமர்ந்து அமைதியாக பயணிக்கவே, பெரும் பாலான பயணிகள் விரும்புகின்றனர்.
சில தனியார் பஸ்களில், ஒரே “சிடி’யை, திரும்ப திரும்ப ஒளிபரப்பி எரிச்சலூட்டுகின்றனர். மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் செல்லும் பல அரசு பஸ்களில், 50 ஆண்டு பழமையான பாடல்களை ஒளிபரப்புகின்றனர். 80, 90களில் வெளிவந்த படங்களில் இருந்து பாடல்களை ஒளிபரப்பி, மக்கள் ரசனையை முடமாக்குகின்றனர். கூடவே, விளம்பரத்தையும் ஒளிபரப்பி, பொறுமையை சோதிக்கின்றனர்.
காதை செவிடாக்கும் அதிக சக்தி கொண்ட ஸ்பீக்கர்களை பொருத்தி, பயணிகளை தலைவலி, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.போக்குவரத்து துறை அலுவலர்கள், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணிகளின் நலன் பாதிக்கப்படும் விதத்தில் நடந்து கொள்ளும் பஸ்கள் பற்றி புகார் தெரிவிக்க, அனைத்து பஸ்களிலும் மொபைல் போன் எண்களை இடம் பெறச் செய்ய வேண்டும்.










