உள்ளூர் சந்தையில் பட்டுக்கூடு கொள்முதல் குறைந்தது : சீனா இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்பு எதிரொலி

Udumalai: சீனாவில் இருந்து பட்டு நூலிழை இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறி, ரீலர்கள் உள்ளூர் சந்தையில் பட்டுக்கூடுகள் கொள்முதலை குறைத்துள்ளனர். இதனால், பல ஆயிரம்டன் கூடுகள் தேங்கி, விலை வேகமாக சரிந்து வருகிறது. இந்தியாவின் பட்டுத்துணிகள் உற்பத்திக்கு தேவையான கச்சா பட்டு, சீனாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது.

Cotton

Cotton

உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க, வெண்பட்டுக்கூடுகள் வளர்ப்பை மத்திய அரசு ஊக்குவித்தது. தமிழகத்தில் வெண்பட்டுக்கூடுகள் வளர்ப்பில் கோபி, உடுமலை, பழனி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகள் முன்னணியில் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ கூடுகள், இப்பகுதிகளில் இருந்து கர்நாடகாவுக்கு விற்பனைக்கு சென்று வருகின்றன.நிலையான விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால், கடந்தாண்டு வரை விவசாயிகள் வெண் பட்டுக்கூடு வளர்க்க தயக்கம் காட்டினர்.

இந்நிலையில், மத்திய அரசு கச்சா பட்டு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்தது மற்றும் இயற்கை சீற்றங்களால் சீனா உற்பத்தி பாதிப்பு ஆகிய காரணங்களால் உள்ளூர் கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்க துவங்கியது.கிலோ 130 ரூபாயில் இருந்து விலை 260 ரூபாய் வரை வேகமாக உயர்ந்தது. சராசரியாக, கிலோவுக்கு 250 ரூபாய் விலை நிலையாக பல மாதங்கள் நீடித்தது. இதனால், வெண்பட்டுக்கூடு வளர்ப்பு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்தது. சில மாதங்களாக, கர்நாடகா கொள்முதல் மையத்தில் வெண்பட்டுக்கூடுகள் விலை குறையவில்லை. இதனால், பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஒரு வாரமாக கர்நாடகா மையத்தில் ரீலர்கள் கொள்முதலை முற்றிலுமாக நிறுத்தினர்.

தமிழகத்தில் இருந்து பட்டுக்கூடுகளை எடுத்துச் சென்ற உற்பத்தியாளர்கள், பல நாட்கள் காத்திருந்து விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. வெளிமாநில மார்க்கெட் கொள்முதல் குறைப்பு உள்ளூர் மையங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.கோவை, தர்மபுரி உட்பட கொள்முதல் மையங்களிலும் கடந்த ஒரு வாரமாக ரீலர்கள் கொள்முதலை குறைத்துள்ளனர். இதனால், பட்டுக்கூடுகளின் விலை பல மடங்கு குறைந்து உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு 80 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. தரமான கூடுகளுக்கு அதிகபட்சமாக 210 ரூபாய் விலை கிடைத்து வருகிறது. உள்ளூர் மையங்களில் 200 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. விலை சரிவால் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தட்பவெப்ப நிலை மாற்றம், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற இடையூறுகளை தாண்டி, உற்பத்தி செய்த கூடுகளுக்கு விலை குறைந்துள்ளதால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:கர்நாடகா கொள்முதல் மையத்தில் ரீலர்கள் கொள்முதலை முற்றிலுமாக குறைத்துள்ளனர். கச்சா பட்டு இறக்குமதி அதிகரிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்பால், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் நூலிழைக்கு விலை கிடைக்காது என்பதால் ரீலர்கள் கொள்முதலை குறைத்துள்ளனர்.

இறக்குமதி குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே “ரீலர்கள்’ முழு உற்பத்தியில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. அதுவரை வெண்பட்டுக்கூடுகளுக்கு விலை கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. கோடை காலத்தில் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிக்கும் நிலையில் விலை கிடைக்காவிட்டால் நஷ்டம் அதிகரிக்கும். இப்பிரச்னைக்கு தீர்வாக பட்டுக்கூடுகளுக்கு ஆதார விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் இவ்வாறு, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags: , , , , , , , , ,

Category: Tirupur News, Udumalpet, Udumalpet news, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply