நஞ்சப்பா பள்ளியில் சுகாதாரக்கேடு : மாணவர்கள் புலம்பல்
Tirupur : திருப்பூர் நஞ்சப்பா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சிறுநீர் கழிப்பிடங் களை வாரம் ஒருமுறை கூட சுத்தம் செய்வதில்லை. அவற்றை பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் பார்க் ரோட்டில் இருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ளது, நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி; 4,000க்கும் மேற் பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மைதானத்தின் கடைசியில் சிறுநீர் கழிப்பிடம் கட்டப் பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டாமல், 100 மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் கழிப் பிடம் சிறியதாக கட்டப் பட்டுள்ளது. தண்ணீர் வசதி செய்து தரப்படாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், மாணவர்கள் உள்ளே செல்லாமல், மைதானச் சுவற்றில், கழிப் பிடத்துக்கு முன்பகுதியில் சிறுநீர் கழிக்கின்றனர். பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வீடுகளிலும் துர்நாற்றம் வீசுகிறது.
பள்ளி மாணவர்கள் கூறியதாவது: பள்ளியில் விளையாட்டு போட்டிகள் அல்லது விழாக்கள் நடந்தால், சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தம் செய்கின்றனர். மற்ற நேரத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. சிறுநீர் கழிப்பிடத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. பயன்படுத்திய பின், தண்ணீர் ஊற்றவோ, கால்களை கழுவவோ தண்ணீர் வசதியில்லை. பள்ளி முன்பகுதியை தவிர வேறெங்கும் தண்ணீர் குழாய் இல்லை. வாரம் ஒருமுறையாவது கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும், என்றனர்.










