பஸ் ஸ்டாண்ட் அருகே வழித்தட ஆக்கிரமிப்பு : அகற்றினால் நெரிசல் குறையும்
Tirupur : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சியம்மன் கோவில் பகுதிக்குச் செல்லும் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறுகியுள்ள இவ்வழியை அகலப்படுத்தி, இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு மாற்றினால், பஸ் ஸ்டாண்டுக்குள் டூவீலர்களால் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படும்.
திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்டது காமாட்சியம்மன் கோவில் வீதி. இப்பகுதியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு குறுக்குச்சந்து உள்ளது. இவ்வழியாகச் சென்றால், பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள டூவீலர் ஸ்டாண்டுக்கு செல்ல முடியும்.
பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள மாநகராட்சி டூவீலர் ஸ்டாண்டுக்கு, பஸ்கள் உள்ளே நுழையும் பிரதான வழியில் மட்டுமே செல்ல முடியும். டூவீலர் ஸ்டாண்டின் முன்பகுதியிலும், பஸ் ஸ்டாண்டுக்குள்ளும் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. ஸ்டாண்டில் இருந்து எடுக்கப்படும் டூவீலர்கள், நிறுத்துவதற்காக வரும் டூவீலர்கள் என அனைத்து வாகனங்களும், பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து செல்கின்றன. இதனால், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழியாக குறுக்கு சந்தைப் பயன்படுத்த முடியும். பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சி அம்மன் கோவில் வீதிக்குச் செல்லும் குறுக்கு சந்து, 12 அடி அகலம் உடையது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு, நடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
போதாக்குறைக்கு, குறுக்குச்சந்தின் ஓரமாக சாக்கடை வடிகால் அமைக்கப்படாமல், நடுவீதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குழிதோண்டி, வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இதை மாற்றி, ஆக்கிரமிப்பை அகற்றி, ஓரமாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, குறுக்குச்சந்து துவங்கும் இடத்தில், டூவீலர்கள் செல்லும் வகையில் சரிவான பாதை ஏற்படுத்த வேண்டும். டூவீலர் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள், இவ்வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என உத்தரவிட வேண்டும். இதன்மூலம், பஸ் ஸ்டாண்டுக்குள் தேவையற்ற நெரிசல் ஏற்படாது.










