நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து ரோடு போடக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை
Tirupur : “வளம் அமைப்பு மேற்கொள்ளும் நொய்யல் சீரமைப்பு பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, விரைவில் “சர்வே’ எடுத்துக் கொடுக்க வேண்டும்’ என, நில அளவை பிரிவு அதிகாரிகளுக்கு கலெக்டர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும், ரோடு போடும் போது, நொய்யல் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து போடக்கூடாது; அருகிலுள்ள நில உரிமையாளர்களிடம் பேசி, இடத்தைப் பெற்று ரோடு போட வேண்டுமென, அறிவுறுத்தியுள்ளார்.
“வளம்’ அமைப்பு சார்பில், நடராஜா தியேட்டர் நொய்யல் பாலம் முதல் அணைக்காடு வரை நொய்யல் ஆற்றை தூர்வாரி சுத்தப்படுத்தி, ஆற்றின் இரு பகுதியிலும் வழித்தடம் அமைக்கப்படுகிறது. குமரன் ரோடு பாலத்தில் இருந்து, அணைக்காடு வரை, ரோடு இல்லாத பகுதிகளில் வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 30 அடி அகலத்தில் தார் ரோடு அமைக்க வளம் அமைப்பு முடிவுசெய்துள்ளது.நொய்யலை தூர்வாரி சுத்தப்படுத்தும் போது, ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நொய்யல் சீரமைப்பு பணியை, கலெக்டர் சமயமூர்த்தி நேற்று பார்வையிட்டார். மின் மயானம், அணைக்காடு, கஜலட்சுமி தியேட்டர் ரோடு, யுனிவர்சல் ரோடு, மாநகராட்சி பூங்கா என, அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, “ஆற்றில் எப்போது வேண்டுமானாலும், வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்; அதனால், முழு அகலத்தில் ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும்; வெள்ளம் வரும் போது, வளைவு பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே, அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, ரோடு அமைக்க வேண்டும்.
“ஆற்றின் தெற்கு பகுதியில் மட்டும், தற்போது ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு பகுதியிலும் ஆக்கிரமிப்பை கண்டறிந்து அகற்ற வேண்டும். ஆற்றுப்பகுதியில் ரோடு அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தை பெற்று, அதில் ரோடு அமைக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் பொதுப்பணித்துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
“ஆற்றுப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி, மாற்று இடம் வழங்க வேண்டும். ஆற்றில் உள்ள பாறைகளை அகற்ற வெடி வைக்கக்கூடாது, “ராக்கர்’ மெஷின்களை கொண்டு துளையிட்டு அகற்ற வேண்டும். ஒருபகுதியில் மண்ணை எடுக்கும் போது, தேவையான பகுதியில் கொட்டி சமப்படுத்த வேண்டும்’ என, வளம் அமைப்பினர் மற்றும் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
மேலும், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, நில அளவை துறையினர் விரைவில் சர்வே செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். “நொய்யலை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியை, சிறப்பாக செய்து கொடுப்போம்’ என, நொய்யல் சீரமைப்பு கமிட்டியினர் உறுதியளித்தனர்.ஆய்வின்போது, தாசில்தார் பாலசுப்ரமணியம், மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, பொறியாளர் கவுதமன் உட்பட பலர் உடனிருந்தனர்.
நல்லூர் குட்டை ஆய்வு: நல்லூர் குட்டைக்குச் சென்ற கலெக்டர், ஓடையின் நீர் வழிப்போக்கு வரைபடங்களை ஆய்வு செய்தார். பட்டா பூமிக்குள் செல்லும் “நிலவியல் ஓடை’ ப்படி, தண்ணீரை கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புறம்போக்கு மற்றும் பட்டா பூமிக்குள் செல்லும் ஓடையை நில அளவை செய்து, தண்ணீர் செல்வதற்கான வழியை ஏற்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின், புறம்போக்கு மற்றும் பட்டா பூமிக்குள் செல்லும் ஓடையை தாசில்தார் பாலசுப்ரமணியன் பார்வையிட்டார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, நகராட்சி தலைவி விஜயலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி பொன்னுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.











