4 மணி நேரம் மின்சாரம் பயன்படுத்த தடை : நெசவு பூங்கா விசைத்தறியாளர்கள் கவலை கண்ணீர்
Palladam : பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் தினமும் நான்கு மணி நேரம் மின்சாரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது; அங்கு தொழிற்கூடங்களை குத்தகைக்கு எடுத்து, துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு விசைத்தறியா ளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமம் பெரும்பாளியில் 65 ஏக்கர் பரப்பளவில் 55 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா, 2008ல் துவக்கப்பட்டது; மத்திய அமைச்சர் சிதம்பரம் துவக்கி வைத்தார். பூங்காவில் 90 தொழிற்கூடங்கள் உள்ளன.இவற்றை சிறு மற்றும் குறு விசைத்தறியாளர்கள் 12 ஆண்டு குத்தகைக்கு எடுத்து, நவீன தறிகளால் துணி உற்பத்தி செய்து வருகின்றனர். பூங்கா பெயரில் ஒரே ஒரு மின் இணைப்பு மட்டும் பெற்றுள்ளனர்.
அதில் இருந்து முதலீட்டாளர்கள் சப்-மீட்டர் பொருத்தி மின்சாரம் எடுத்துக் கொள்கின்றனர்.ஒரே இணைப்பில் மின் நுகர்வு அதிகமாக இருப்பதால், உயர் மின்னழுத்த பகிர்மானத்தில் நெசவு பூங்கா சேர்க்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, மின்வாரியத்தின் சட்ட திட்டப் படி, தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 வரை மின்சாரம் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை அமலில் உள்ளது. கூடுதலாக நான்கு மணி நேரம் மின்சாரம் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளதால், நெசவு பூங்கா தொழிற்கூடத்தை பயன்படுத்தும் முதலீட்டாளர்கள், போதிய அளவு துணி உற்பத்தி செய்ய முடியாமல் தவிக் கின்றனர்.”தினமும் 18 மணி நேரம் மட்டும் மின்சாரம் பயன்படுத்தினால், முதலீடு செய்துள்ள பணத்துக்கு வங்கி வட்டி கூட வராது’ என, முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி நெசவு பூங்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு மணி நேர மின் தடையை நீக்க வேண்டும்; 24 மணி நேரமும் மின்சாரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சிறு, குறு முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி தினமலர்










