போதையில் வாகனம் ஓட்டியோரின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை
Palladam : பல்லடத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 180 பேரிடம் 75 ஆயிரத்து 875 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது; போதையில் தாறுமாறாக இரு சக்கர வாகனம் ஓட்டிய ஆறு பேரின் லைசென்சை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவை – திருச்சி மெயின் ரோட்டில் பல்லடம் அமைந்துள்ளதால், இங்கு போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது; அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்கின்றன.
பெரும்பாலான விபத்துக்கள், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்காததால் நடக்கின்றன.விபத்துக்களை தடுக்கும் வகையில், பல்லடத்தில் பனப்பாளையம், நால்ரோடு, தாராபுரம்ரோடு, கோவை ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை போக்குவரத்து எஸ்.ஐ., ஜமுனா தலைமையிலான போலீசார் கண்டறிந்து, வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த ஜன., மாதம் போக்குவரத்து போலீசாரின் சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 45 பேர், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய 40 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 40 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய மூன்று பேர் உட்பட 180 பேர் சிக்கினர். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களிடம் இருந்து 75 ஆயிரத்து 875 ரூபாய் அபராத கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
போதையில் தாறுமாறாக இரு சக்கர வாகனம் ஓட்டிய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்யக்கோரி, திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளனர்.










