பறிபோகிறது பசுமை! உடுமலை – பல்லடம் ரோட்டில் மரங்கள் வெட்டுவதால் ‘வெறிச்’
Tirupur : ரோடு விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருவதால், உடுமலை – பல்லடம் இடையே உள்ள ரோடு பசுமையிழந்து வறுமையாக காட்சியளிக்கிறது.
இழப்பை ஈடுகட்ட புதிய மரக்கன்றுகளை நட்டினால் மட்டுமே பசுமை செழிக்கும். உடுமலை-பல்லடம் இடையேயுள்ள 48 கி.மீ., ரோட்டில், பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினரால் ஆயிரக்கணக்கான மரங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது.
சின்னவீரம்பட்டி கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கான மரங்கள் பல கி.மீ.,க்கு வரிசையாக வளர்ந்திருந்தது.
நிழல் தரும் மரங்களால் வாகன ஓட்டிகளுக்கு இந்த ரோடு பசுமை சாலையாக காணப்பட்டது. இந்நிலையில், மத்திய சாலை மேம்பாடு திட்டத்தின் மூலம் இரு புறங்களிலும் 10 மீட்டர் விரிவு படுத்துவதற்காக 35 கோடி ரூபாய் செலவில் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
பல்லடம் ரோட்டில் 5 கி.மீ., பகுதி 7 மீ., அகலத்திலும், பிற பகுதிகள் ஐந்தரை மீட்டர் அகலத்திலும் இருந்தது. ரோட்டிலிருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. புளி, வாகை உட்பட பல்வேறு மரங்கள் இந்த ரோட்டில் செழித்து வளர்ந்திருந்தது. முதற்கட்ட பணிகளின் போது கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் எளிதாக திரும்பவும், பிற பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருந்த நூற்றுக்கணக்கான மரங்களின் பெரிய கிளைகள் வெட்டப்பட்டது.
தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரோடு 10 மீ., அகலப்படுத்தியதும், பல இடங்களில் மரங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாமல் இருக்க வெட்டி அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டது. வருவாய்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து அப்புறப்படுத்த வேண்டிய மரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.
ஒவ்வொரு கிலோமீட்டரிலும் ஒரு மரம் வெட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, ஏரிப்பாளையத்திலிருந்து பொன்னேரி வரை பல மரங்கள் அடியோடு வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட வேண்டிய மரங்கள் சிவப்பு குறியிடப்பட்டுள்ளது.இந்த கணக்கீட்டின்படி உடுமலை பகுதியில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான மரங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த இந்த மரங்கள் அடியோடு வெட்டப்பட்டுள்ளதால், ரோடு பல இடங்களில் வெறுமையாக காட்சியளிக்கிறது. கிளைகள் அகற்றப்பட்ட மரங்கள் பரிதாப நிலையில் காணப்படுகிறது. கடந்தாண்டு இந்த ரோட்டில் நடப்பட்ட இளமரக்கன்றுகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டு காய்ந்துள்ளது. பசுமைக்கும், சுற்றுசூழலுக்கும் உறுதுணையாக இருந்த பல ஆண்டு மரங்கள் வெட்டப்பட்டதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக தவிர்க்க முடியாமல் பச்சை மரங்கள் வெட்டும் போது அதை ஈடுகட்டும் வகையில், புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். ஒரு மரம் வெட்டப்பட்டால் பத்து மரக்கன்றுகள் புதிதாக நட வேண்டும் என்ற விதிமுறையை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். பல்லடம் ரோட்டில் இழந்த பசுமையை மீட்க உடனடியாக மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பிற்கு குழு அமைக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.










