பெட்ரோலிய பொருட்களுக்கு வரிச்சலுகை எதிர்பார்க்கும் பனியன் உற்பத்தியாளர்கள்
Tirupur : பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் வாடகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பனியன் உற்பத்தியில் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு தமிழக பட்ஜெட்டில் வரிச்சலுகை அளித்தால் மட்டுமே நிர்பந்தம் குறையும் என, பனியன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பூர் சுற்றுப்பகுதியில் 2,000க்கும் அதிகமான உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆயிரத்திற்கும் அதிகமான சிறு பனியன் உற்பத்தியாளர்களும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை, திருப்பூரில் மட்டுமே பனியன் உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஜமுக்காளம், லுங்கிகள், பெட்ஷீட், கொசுவலை உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. தேசிய அளவில், கோல்கட்டா, குஜராத், கர்நாடகா, மும்பை, உத்தரப்பிரதேசம் மார்க்கெட்களில், தமிழக பனியன் ஆடைகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. சர்வதேச சந்தையில், மதிப்புக்கூட்டப்பட்ட ஏற்றுமதி ஆடைகளுக்கு வரவேற்பு இருப்பதை போல், பல்வேறு மாநிலங்களில் திருப்பூர் ஜவுளிகளுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது.பனியன் தொழில் வளர்ச்சியில் பங்கெடுக்கும் வகையில், குஜராத், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், உள்நாட்டு விற்பனையிலும், போட்டி மிகுந்த சூழல் உருவாகியுள்ளது. திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து, லாரிகள் மூலமாகவே அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக, 3,000க்கும் அதிகமான லாரிகள் இயங்குகின்றன. மத்திய பட்ஜெட் அறிவிப்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது, தொழில் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி
களுக்கான கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து பாதித்தால், பனியன் விற்பனை பாதிக்கும் என்ற அளவுக்கு, திருப்பூர் பனியன் நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. திடீரென, 20 சதவீத வாடகை கட்டண உயர்வால், உற்பத்தி செலவு கணிசமாக உயரும் என்று அச்சத்தில்உறைந்துள்ளனர்.
பனியன் தொழிலில் அனைத்து பிரிவினருக்கும் 15 சதவீத உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது என, உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேநேரத்தில், கூடுதல் செலவை காரணம் காட்டி, விற்பனை விலையை உடனடியாக உயர்த்திவிட முடியாது. எனவே, 2010-11 பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு சலுகை அளித்தால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே, புதிய சட்டசபை வளாக திறப்பு விழாவை தொடர்ந்து, வரும் 19ம் தேதி நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.











