போலீஸ் கடத்தல்காரர்களோடு நேரடி கைகோர்ப்பு
Madathukulam : மடத்துக்குளம் போலீஸ் செக்போஸ்ட் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களிலும் போலீசார் மற்றும் இவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் பகிரங்கமாகவே இரவு – பகல் பார்க்காமல் “சூப்பர் வசூல்’ செய்வதால் மடத்துக்குளம் மக்கள் நொந்து போகின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் “மாமூல்’ வாழ்க்கை கொடி கட்டி பறக் கிறது.
திண்டுக்கல் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இவ்வழியாக பல்வேறு நகரங்களிலிருந்து அதிகளவில் வாகனங்கள் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு செல்கிறது. திண்டுக்கல் – திருப்பூர் மாவட்டத்தின் எல்லையாக மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்திருப்பதால் திருப்பூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் போலீஸ் “செக்-போஸ்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனும் செயல்படுகிறது.
இதனால், செக் -போஸ்ட்டில் மாவட்டத்தில் நுழையும் அனைத்து வாகனங்களையும் குறிப்பாக லாரிகளை போலீசார் தீவிர சோதனை செய்தபின் மாவட்டத்தில் நுழைவதற்கு அனுமதி வழங்குவர். ஆனால், இந்தப்பணி போலீசார் விரும்பினால் மட்டுமே நடக்கிறது. ஆனால், செக்போஸ்ட்டில் நுழையும் வாகனங்களிடம் மாமூல் வசூல் செய்வதற்கு மட்டும் சளைக்காமல் இரவு – பகலமாக வசூல் செய்யப்படுகிறது.
இதற்காக, சில இளைஞர்களை போலீசாரே நியமனம் செய் துள்ளனர். பகல் நேரத்தில் ஒருவர், இரவு நேரத்தில் ஒருவர் என “ஷிப்ட்’ வைத்து “வசூல்’ பணியில் ஈடுபட்டுள்ளனர். செக்போஸ்ட் டை கடந்து செல்லும் வாகனங்களில் லாரிகளுக்கு ஒரு ரேட், கால் நடைகள் மற்றும் ஆட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு ஒரு ரேட், சட்ட விரோதமான பொருட்கள் எடுத்து வந்தால் அதற்கு “தனிரேட்’ என வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மடத்துக்குளம் செக்போஸ்ட் வழியாக கேரளாவுக்கு அனுமதியின்றி மணல் மற்றும் எரிசாராயம், ரேஷன் அரிசி,உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கடத்தப்படுகிறது. இதேபோல், டூ வீலர், கார்களில் வருபவர்களிடம் மிரட்டும் தோணியில் மாமூல் வசூலிக்கப்படுகிறது. இதை யாராவது எதிர்த்தால் ஆபாசமான வார்த்தையில் அர்ச்சனை செய்கின்றனர். இவ்வாறு வசூல் செய்யப்படும் மாமூல் பணத்தை சரியாக பிரித்து போலீசாருக்கு குறிப்பிட்ட அளவும், மாமூல் வசூலிக்கும் இளைஞர்களுக்கும் பிரித்து கொள்கின்றனர்.
இது மட்டுமில்லாமல், இரவு நேரத்தில் மது அருந்தும் பாராகவும் செக் போஸ்ட் பயன் படுத்தப்படுகிறது. மடத்துக்குளம் போலீசாரின் மகிமை அப்பகுதி மக்களுக்கு தெரியும் இருப்பினும், எங்கே வெளியில் சொன்னால், தங்கள் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவார்களோ என்கிற பீதியில் நமக்கேன் வம்பு என அமைதி காத்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடிபகுதியில் இருக்கும் மடத்துக்குளம் பகுதியில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கொஞ்சம் கடைக்கண் பார்வை பார்த்தால் மக்களுக்கு மட்டுமல்ல, போலீஸ் மீது மக்களுக்கு உள்ள மரியாதையும் காப்பற்றப் படும். நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தவேண்டும், தீவிரவாதிகள் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் போலீசாரை உஷார் படுத்தி வரும் நிலையில், மடத்துக்குளம் போன்ற போலீஸ் செக்போஸ்ட்டில் வாகனங்களை எவ்வித சோதனை செய்யாமலும், மர்ம நபர்கள் கார் மற்றும் டூ வீலர்களில் தாராளமாக சென்று வருவதையும் வேடிக்கை பார்த்து விட்டு, தங்களுக்கு மாமூல் மட்டும் கிடைத்தால் போதும் என நினைத்தால் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.










