பொது சுத்திகரிப்பு நிலையம், 65 சாய ஆலைகள் மூடல்: மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி
Tirupur : மாசு கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில், “ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தை சரிவர செயல்படுத்தாத மூன்று பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அவற்றின் உறுப்பினரான 65 சாய ஆலைகள் நேற்று மூடப்பட்டன. அவற்றின் மின் இணைப்புகளை துண்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாயக்கழிவுநீரை, “ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை தொடர்ந்து, ஏற்கனவே இயங்கி வந்த எட்டு சுத்திகரிப்பு ஆலைகளுடன், புதிதாக ஆர்.ஓ.,வுடன் கூடிய 12 ஆலைகளின் கட்டுமானப் பணிகள் துவங்கின. அதன்படி, திருப்பூரில் ஆண்டிபாளையத்தில் 20 சாய ஆலைகள்; அங்கேரிபாளையம் 75; அருள்புரம் 17; சின்னக்கரை 31; ஈஸ்டர்ன் 26; கள்ளிக்காடு 12; கரைப்புதூர் 25; காசிபாளையம் 14; குன்னாங்கல்பாளையம் 19; குப்பாண்டம்பாளையம் 19; மண்ணரை 28; மங்கலம் 17; மாணிக்காபுரம் புதூர் 10; பார்க் மூன்று; ராயபுரம் 26; எஸ்.பெரியபாளையம் ஏழு; சிறுபூலுவபட்டி 24; திருப்பூர் முருகம்பாளையம் 67; வீரபாண்டி 70; வேட்டுவபாளையம் ஒன்பது என, 519 சாய ஆலைகளை உறுப்பினர்களாகக் கொண்ட 20 பொதுசுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டன.
கோர்ட் விதித்திருந்த விதிமுறைகளின்படி, ஆர்.ஓ., தொழில்நுட்பம் அமைக்கப்பட்டது. ஆரம்ப கால கட்டத்திலேயே, பார்க், பொதுசுத்திகரிப்பு நிலையம் பணிகளை நிறுத்திக்கொண்டது. அதற்கு பிறகு ஆண்டிபாளையம், குப்பாண்டம்பாளையம், மாணிக்காபுரம் புதூர், எஸ்.பெரியபாளையம் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் வழக்கு தொடர்பாக இயங்குவதில்லை.
வேட்டுபாளையம் கட்டமைப்பு பணிகள் நிறைவு பெறவில்லை என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. மீதியுள்ள 14 ஆலைகளில், ஆர்.ஓ., பணிகள் முடிக்கப்பட்டிருந்தவற்றிற்கு இசைவாணை வழங்கப்பட்டது. அதன் உறுப்பினர்களான, 460 சாய ஆலைகள் அனுமதி பெற்றன.
அதிகப்படியான செலவு செய்ய முடியாததால், அனுமதி பெற்ற சாய ஆலைகள், அனுமதி பெறாத ஆலைகள் நிறுத்தப்பட்டன. மீதியிருந்த 400க்கும் அதிகமான ஆலைகள் மட்டுமே இயங்கின. “ஜீரோ டிஸ்சார்ஜ்’சுத்திகரிப்பு குறித்த அனுபவ அறிவு இல்லாததால், போதிய கால அவகாசம் வேண்டுமென, ஆலைகள் கோர்ட்டில் மனு செய்திருந்தன. இதில், அபராதம் செலுத்த மட்டும் மேலும் இரண்டுமாத அவகாசம் வழங்கப்பட்டது. சோதனை ஓட்டம் மேற்கொள்வதால், மாசு கட்டுப்பாடு வாரியமும் சிறிது அவகாசம் கொடுத்தது.
கடந்த ஜனவரி மாதத்துடன் கால அவகாசம் முடிந்தும், மாசு கட்டுப்பாடு வாரியம் பல முறை ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்தது. மார்ச் மாதத்திற்கு பிறகு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சுத்திகரிப்பு செலவு அளவுக்கு அதிகமாக உயர்ந்ததால், ஆலைகள் உற்பத்தியை குறைத்துக்கொண்டு, கழிவுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தின.
கண்டும் காணாமல் விடப்பட்டிருந்த தனியார் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டன. அதன்படி, மொத்தமுள்ள 144 ஆலைகளில், சரிவர இயங்காத ஆலைகள் மூடப்பட்டன. முதல்கட்டமாக 27, இரண்டாம் கட்டமாக 10, வாரிய தலைவர் ஆய்வின் போது, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவை வெளியேற்றிய ஒரு ஆலை என, 38 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், கடந்த 13ம் தேதி மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் நடத்திய ஆய்வின்போது, அங்கேரிபாளையம் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில், கழிவுநீர் முறைகேடாக வெளியேற்றுவது கண்டறியப்பட்டது. அதன்படி, அங்கேரிபாளையம் பொதுசுத்திகரிப்பு நிலையம் மற்றும் உறுப்பினராக இருந்த 74 ஆலைகள் மூடப்பட்டன. சமீபத்தில் நடத்திய ஆய்வில், மண்ணரை, கரைப்புதூர், சிறுபூ<<லுவபட்டி ஆகிய பொதுசுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், மண்ணரையில் 22; கரைப்புதூர் 19; சிறுபூலுவபட்டி 24 என, மூன்று பொதுசுத்திகரிப்பு நிலையங்களும், 65 சாய ஆலைகளும் நேற்று மூடப்பட்டன. மின் இணைப்புகளை துண்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் சுற்றுப்பகுதியில் இயங்கும் பொதுசுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அருள்புரம், சின்னக்கரை, ஈஸ்டர்ன், கள்ளிக்காடு, காசிபாளையம், குன்னாங்கல்பாளையம், மங்கலம், ராயபுரம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய 10 சுத்திகரிப்பு நிலையங்களும், அதன் உறுப்பினரான 299 சாய ஆலைகள் மட்டும் இயங்கும்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல்பொறியாளர் கண்ணன் கூறுகையில்,”" திருப்பூரில் நடத்திய ஆய்வில், மேலும் மூன்று பொதுசுத்திகரிப்பு நிலையங்கள், 65 சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும். சுத்திகரிப்பு பணிகளை சரிவர செய்யாதது கண்டறியப்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முதலீடு அதிகம்; முடங்கும் ஆலைகள்: தாங்க முடியாத செலவாக இருந்தாலும், அரசு மானியத்தை நம்பி, 800 கோடி ரூபாய் செலவில் 20 பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. எங்கும் இல்லாத “ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தை திருப்பூர் மக்கள் செயல்படுத்த முயற்சித்தாலும், போதுமான அளவு தொழில்நுட்ப அறிவு கிடைக்காது; அரசும் அதற் கான முயற்சிகளை எடுக்கவில்லை. இதனால், அதிகப்படியான முதலீட்டில் அமைக்கப் பட்ட பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், இன்று 50 சதவீத நிலையங்களும், சாய ஆலைகளில் 60 சதவீத ஆலைகள் மட்டுமே இயங்குகின்றன.
நன்றி தினமலர்










