தமிழக பட்ஜெட்டை எதிர்நோக்கும் பனியன் தொழிலாளர்கள்
Tirupur : திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுவரை, அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வரும் பட்ஜெட் கூட்டத்தில், அதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என, பனியன் தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருப்பூர் பகுதியில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் தங்கி, பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூரில் ஏற்படும் குடும்ப செலவுக்கு பயந்து, குடும்பத்தை சொந்த ஊரில் தங்க வைத்து விட்டு, தனியாக திருப்பூரில் “ரூம்’ வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்கின்றனர். வேலைவாய்ப்பு இல்லாத பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு 5,000 பேர் வரை, திருப்பூரை நோக்கி படை
யெடுக்கின்றனர்.
முதலில் தனியாக வந்து, தொழில் அமைந்ததும், குடும்பத் தினரை வரவழைத்து, அனைவரும் பனியன் தொழிலில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான இளைஞர்களும், இளம்பெண்களும், திருப்பூரில் “ரூம்’ எடுத்து, தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்கின்றனர். செலவு போக, மீதமாகும் தொகையை, வீட் டுக்கு அனுப்பி வைக்கின்றனர். வெளியூர் தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை கொடுக்கும் பணியை, ஏஜன்டுகள் அதிகம் பேர் செய்து வருகின்றனர். திருப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு கம்பெனியில் வேலை, தங்குவதற்கு வீடு என அனைத்து வசதிகளையும் ஏஜன்டுகள் செய்துகொடுக்கின்றனர். ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு பிறகு, ஏஜன்டுகளும் கணிசமான அளவு வருவாய் ஈட்டுகின்றனர்.
திருப்பூரில் தங்கியிருக்கும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரமாக இருப்பதால், தனிப்பட்ட நபரின் பாதிப்புகள் வெளியே வர நாளாகிறது. வீட்டு வாடகையும், தமிழகத் தில் இல்லாத அளவுக்கு, இங்கு அதிகமாக உள்ளது. குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பல்வேறு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கோரிக் கையின் பேரில், தமிழக அரசு சட்டசபை கூட்டத்தொடரில், ஆயிரம் பேர் தங்கும் வகையிலான, மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படும் என, அறிவித்திருந்தது. ஒரே இடத்தில் அமைக் காமல், நகரின் முக்கிய ரோடுகளின் சந்திப்புகளில் விடுதி அமைக்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
அறிவிப்பு வெளியாகி, பல மாதங்களாகியுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் எதுவும் துவங்கப்பட வில்லை. இதனால், அரசு அறிவிப்பை எதிர் பார்த்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருப்பூர் பகுதிக்கான அறிவிப்புகள் அனைத்துமே, தொழில் அமைப் புகளுக்கு நன்மை அளிப்பதாக மட்டுமே இருந்தன. பனியன் தொழிலாளர்கள் நேரடியாக பயனடையும் வகையில், எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கி பணியாற்ற, திருப்பூரின் முக்கிய பகுதிகளில் பனியன் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியை அமைக்க வேண்டும். தமிழக அரசு அத்தகைய அறிவிப்பை வெளியிடுமானால், லட்சக்கணக்கான பனியன் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் கிடைக்கும்.










