உடுமலை அருகே நிலத்தடியில் துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு
Tirupur : உடுமலை- மூணாறு மழைநீர் வடிகால் அமைக்கும் போது, நிலத்தில் புதைத்து வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை, குறிச்சிக்கோட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை உடுமலை- மூணாறு மழை நீர் வடிகால் அமைப்பதற்காக ரோட்டோரத்திலிருந்த முட்புதர்களை அகற்றி, வடிகால் தோண்டுவதற்காக நிலத்தை தோண்டினர்.
அப்போது, நிலத்தில் புதைந்த நிலையில் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும், துப்பாக்கிகள் உள்ளதா, தோட்டாக்கள் உள்ளதா என போலீசார் தேடினர். ஆனால், எந்த ஆயுதமும் கிடைக்க வில்லை. நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், “சிங்கிள் பேரல்’, “ப்ரீச் லோடிங்’ வகையை சேர்ந்தவை. ஒரு துப்பாக்கியின் கட்டை முழுமையாக எரிந்தும், மற்றொன்றின் கட்டை பாதி எரிந்த நிலையிலும் இருந்தது. துப்பாக்கியின் “பேரல்’ கள் இரண்டு, பயன்படுத்திய மூன்று தோட்டாக்களும் சிக்கியுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. வனப்பகுதி அருகேயுள்ள வன கிராமமான குறிச்சிக்கோட்டையில், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதால், வன விலங்குகள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், உரிமம் இல்லாத துப்பாக்கிகள் குறித்து போலீசார் கண்காணித்ததால் சம்மந்தப்பட்டவர்கள் எரித்து; மண்ணில் புதைத்து, அழிக்க முயற்சித்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீப காலமாக வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம், வன விலங்கு வேட்டை அதிகரித்துள்ள நிலையில், துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.










