கிராம சுகாதார நலக்குழு ஏற்படுத்த திட்டம் சுகாதாரத்துறை உஷார் நடவடிக்கை
Tirupur: தற்போது, குளிர்ந்த காற்றுடன், மிதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது; நோய் பரவாமல் தடுக்க, மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை உஷார் நடவடிக்கை எடுத்து வருகிறது. கிராம சுகாதார நலக்குழு ஏற்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரமாக, திருப்பூர் மாவட்டத்தில் காலை நேரத்தில் மிதமான வெப்பம், மாலை மற்றும் இரவில் குளிர்ந்த காற்றுடன் சில இடங்களில் அவ்வப்போது தூறல் மழையும் பெய்து வருகிறது. தற்போதைய தட்பவெப்ப நிலையால், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக் குறைவு; சிலருக்கு சளி, காய்ச்சல் பரவுகிறது. மழை மற்றும் குளிர்காலங்களில் டெங்கு, சிக்-குன்-குனியா உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவும்.
குளிர்காலம் துவங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மூலமாக தன்னார்வ தொண்டு அமைப்புகள், பள்ளி மாணவர்களுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள கிராமப்புறப் பகுதியில் “கிராம சுகாதார நலக்குழு’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் என சந்தேகிக்கும் பகுதிகளில் முகாமிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது இக்குழுவின் நோக்கம்; இக்குழுவில், ஒரு சுகாதார ஆய்வாளர், சுகாதார செவிலியர் மற்றும் பூச்சியியல் நீக்க உதவியாளர் அடங்குவர்.
மாவட்டத்தில் உள்ள 56 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதுபோன்று குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுதவிர, பள்ளி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கொசுக்கள் அதிகமாக பரவாமல் தடுப்பது; நோய் பாதித்ததும் அணுக வேண்டிய சுகாதார நிலையங்கள், செய்ய வேண்டிய தடுப்பு முறைகள் உள்ளிட்ட தகவல் அடங்கிய நோட்டீஸ் வினியோகிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தேங்கியுள்ள கழிவு அல்லது மழை நீரில் பெரிய கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க “அபெட்’ மருந்து தெளிப்பது; “டாயித்ரிக்கேரி’ மருந்து கலந்து கொசுக்கள் பரவும் இடத்தில், புகைப்பான் மூலம் தெளிப்பது உள்ளிட்ட நோய் தடுப்பு முறைகளில் ஈடுபடுவது எனவும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி கூறுகையில், “”வழக்கமாக நடத்தப்படும் முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு தான். இந்தாண்டு நவ., டிச., மாதங்களுக்கு முன், இம்மாதமே குளிர்காலம் துவங்கி விட்டதால் முன்னெச்சரிக்கை பணிகளை விரிவுபடுத்தியுள்ளோம். “”நோய் தடுப்பு குழுவுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் இருப்பின் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. சிக்-குன்-குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து மற்றும் ஊசிகள் தயார் நிலையில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கவில்லை,” என்றார்.
நன்றி தினமலர்










