செம்மொழி மாநாடு சிறக்க தமிழில் 3 கோடி அர்ச்சனை
Avinashi: செம்மொழி மாநாடு சிறப்பாக நடக்க கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மூன்று கோடி அர்ச்சனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. செம்மொழி சிறக்கவும், உலகத்தமிழர்கள் நலமுடன் வாழவும், உலகம் முழுவதும் அமைதி ஏற்படவும் கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் தமிழில் மூன்று கோடி அர்ச்சனை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
அவிநாசி வட்டாரத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் (அவிநாசி), மாரியம்மன் கோவில் (கருவலூர்), திருமுருகநாதசுவாமி கோவில் (திருமுருகன்பூண்டி), லட்சுமிநரசிங்கப் பெருமாள் கோவில் (தாளக்கரை), வெங்கடேச பெருமாள் கோவில் (மொண்டிபாளையம்) ஆகிய கோவில்களில் லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 10 லட்சம் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி வரும் 13ம் தேதி துவங்கி, 14ம் தேதி மாலை பூர்த்தியடைகிறது; கோவிலில் உள்ள திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில் நடக்கிறது. கருவலூர் மாரியம்மன் கோவிலில் ஒரு லட்சம் அர்ச்சனை, இதன் உபகோவிலான தாளக்கரை லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் மூன்று லட்சம் அர்ச்சனைகளும் வரும் 13ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வரும் 17, 18ம் தேதிகளில் ஒரு லட்சம் அர்ச்சனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருமுருகன்பூண்டி கோவிலில் ஐந்து லட்சம் அர்ச்சனை நிகழ்ச்சி அடுத்த வாரம் நடக்கிறது.

semmozhi manadu










