10 ஆயிரம் யூனிட் ரத்தம் தானம் செய்ய இலக்கு: களமிறங்கியது முயற்சி மக்கள் அமைப்பு
Tirupur : முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் கடந்தாண்டு 1,000 யூனிட் ரத்தம் தானமாக பெறப் பட்டு, திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டுள்ளது; நடப்பாண்டில் 3,000 யூனிட் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் யூனிட் சேகரித்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Muyarchi-Blood-Donars
கடந்தாண்டு ஜூன் முதல் ஒவ்வொரு மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை முயற்சி மக்கள் அமைப்பு ரத்த தான முகாம் நடத்தி வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் நடத்திய முகாம்கள் மூலம் 1,000 யூனிட் ரத்தம் தானமாக சேகரிக்கப்பட்டு, அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
முயற்சி அமைப்பு தலைவர் சிதம்பரம் கூறியதாவது:ஆண்டு ஒன்றுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 2,000 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. கடந்தாண்டு, எங்கள் அமைப்பு சார்பில் 768 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டது.
தாராபுரம் மருத்துவமனைக்கு 60; உடுமலை 67; கோவை தனியார் மருத்துவ மனைகளுக்கு 211 யூனிட் ரத்தம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் முதல் உலக ரத்த தான தினமான கடந்த 14ம் தேதி வரை 1,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டு முதல் 3,000 யூனிட் ரத்தம் சேகரிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் பணியாளர்கள், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் யூனிட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திலும் முயற்சி அமைப்பு பணியை துவக்க உள்ளது. ரத்த தானம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் விபத்து காப்பீடு மற்றும் 25 ஆயிரம் மதிப்புக்கு மருத்துவ காப்பீடு என, 1.25 லட்சம் காப்பீடு அளிக்கப்படுகிறது.
திருப்பூர் அரசு மருத்துவ மனையில் உள்ள ரத்த வங்கியை முழுமையாக பராமரிக்க முயற்சி அமைப்பு தயாராக இருக்கிறது. இதற்கான திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. தேவைக்கேற்ப, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ரத்த தானம் செய்பவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
ரத்தம் அளிப்பவர்கள் மற்றும் தேவைப்படுவோர், எங்கள் அமைப்பை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 682 பேர் தொடர்ந்து ரத்தம் தானமாக அளித்து வருகின்றனர்; 160 பேர் அவசர காலத்தை கருத்தில் கொண்டு தயாராக உள்ளனர்.
ரத்த தானம் அளிக்க விரும்புவோர், ஜாஹீர் உசேனை 94434 – 26886; முரளிகுமாரை 97900 – 30742 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.










